உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஒரு பயனுமில்லை வேலூரில் முத்தரசன் பேட்டி


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஒரு பயனுமில்லை வேலூரில் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 6:41 PM IST)
t-max-icont-min-icon

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஒரு பயனுமில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

வேலூர்,

வேலூரில் 3 நாட்கள் நடக்கும் ஏ.ஐ.டி.யு.சி. மாநில மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சாமிக்கண்ணு தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் அமர்ஜூத்கவுர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

நேற்று நடந்த 2–வது நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வந்திருந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல கட்டபோராட்டங்களை நடத்தி உள்ளனர். கோர்ட்டுக்கு சென்று தீர்வுகாண முயன்றும் தோல்வியடைந்த பின்னர்தான் 3 நாட்களாக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் நாளைக்குள் (இன்று) பணிக்கு திரும்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேர்வுநேரத்தில் நடக்கும் இப்போராட்டத்தால் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். எனவே கோர்ட்டு உத்தரவை வரவேற்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். எனவே தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து பேசி ஓய்வூதிய கோரிக்கை ஒன்றையாவது நிறைவேற்ற வேண்டும்.

மத்தியில் உள்ள பாதுகாப்புத்துறையினரும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். எனவே மத்திய அரசிலும் இதே நிலை தான் உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒவ்வொரு சேனலுக்கும் கட்டணம் என்பது கேட்பதற்கு இனிப்பாக உள்ளது. ஆனால் இது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாகும். எனவே இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நேற்று நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். இதன் மூலம் 2 ஆயிரம் கோடி, 5 ஆயிரம் கோடி முதலீடு என்று கூறுகிறார்கள். ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை. இந்த மாநாட்டால் ஒரு பயனுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story