பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 3,100 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 3,100 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 3:15 AM IST (Updated: 24 Jan 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 3,100 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்க பள்ளிக்கூடங்களை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

22-ந் தேதி தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 2-வது நாளான நேற்று முன்தினம் தாலுகா தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரத்து 200 பெண்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 308 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 10 தாலுகாக்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காளை மாட்டு சிலை அருகில் ஒன்று திரண்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமசாமி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் தங்கராசு, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கரூர் ரோட்டுக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ராஜகுமார், முருகன், மணிவண்ணன் மற்றும் போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து மறியலுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

உடனடியாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது போலீசாருக்கும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன் பின்னர் போலீசார் 2 ஆயிரத்து 150 பெண்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 100 பேரை கைது செய்து, போலீஸ் வேன்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூட பஸ்களில் ஏற்றினார்கள். பின்னர் அவர்கள் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோடு-கரூர் ரோட்டில் ½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அளவில் அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து உள்ளனர்.

நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் 9 ஆயிரத்து 491 ஆசிரியர்களில் 5 ஆயிரத்து 733 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 7 ஆயிரத்து 400 அரசு ஊழியர்களில் 5 ஆயிரத்து 800 பேர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் வருகை குறைந்தது.

மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதோடு, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கிளை தலைவர் யோகநாதன், செயலாளர் பாலுமகேஷ் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story