“ஓட்டுப்போடும் பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்” கனிமொழி எம்.பி. பேச்சு


“ஓட்டுப்போடும் பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்” கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டுப்போடும் பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சத்தியபாமா தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஏ.பி.சி.வீ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு தலைமுறையிடமும் இருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்கள் பல இருக்கிறது. சிறகொடிக்கப்பட்ட கனவுகள் அனைவருக்கும் உண்டு. ஆணும் பெண்ணும் சமம். அதற்காக எல்லா விஷயங்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை. பெண்களுக்கு ஆண்களை தாண்டியும் சில பலம் உள்ளது. இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது பெண்களின் பாதுகாப்பு.

நாம் போராடும் விஷயங்கள் அடுத்த தலைமுறைக்கு பயன் உள்ளதாக மாறும். நாம் ஓட்டு போட செல்லும் போது, யாருக்கு போடுகிறோம். ஏன் போடுகிறோம் என்ற தெளிவும், விழிப்புணர்வும் பெண்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது. சமூகம் குறிப்பிட்ட கோட்டுக்குள் தான் செல்லவேண்டும் என்றால் எந்த மாற்றமும், புரட்சியும் வராது. எல்லைக் கோடுகளை தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். பெண் உரிமைக்காக போராடியவர் பெரியார். பெரியாரை போன்று உலகில் யாரும் இல்லை. நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு துறையிலும் மற்றவர்களுக்கு பாதை வகுக்கும் வகையில் முன்னுதாரணமாக வளர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியைகள், திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story