தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் கனிமொழி எம்.பி. பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தட்டார்மடம் அருகே பெரியதாழை, அழகப்பபுரம், மணிநகர், படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தி.மு.க. ஒரு போதும் செயல்படுத்தாது.
பன்னாட்டு பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், சிறுதொழில்களை முடக்கும் வகையிலும், மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இதனால் பன்னாட்டு முதலாளிகள் மட்டுமே பயன் பெறுகின்றனர். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சிறு தொழில்களை ஊக்குவித்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகி, நாடு வளம் பெறும்.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியுடன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, கிராமப்புற ஏழைகளுக்கு உதவும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. இதனை மத்திய பா.ஜ.க. அரசு படிப்படியாக குறைத்து கொண்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே நாம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும். வெளிநாட்டில் வாழும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு காவடி தூக்கும் வகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு உள்ளது. மத்தியில் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் அ.தி.மு.க.வையும் வீழ்த்த வேண்டும். தமிழகத்தின் மீது அக்கறை கொள்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும். அதற்கு அனைவரும் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
Related Tags :
Next Story