கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது 2 பேருக்கு வலைவீச்சு


கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது 2 பேருக்கு வலைவீச்சு.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள செங்களூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ் ஏட்டு கதிரவன் ஆகியோர் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது செங்களூரை அடுத்த மேலப்பட்டியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, சாராயம் காய்ச்சிய 3 பேரில் 2 பேர் போலீசாரை கண்டு, கரும்பு தோட்டத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், மேலப்பட்டியை சேர்ந்த யாகப்பன்(வயது 42) என்பதும், முன்னாள் ராணுவ வீரர் என்பதும், அவருடைய கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் தப்பியோடியவர்கள், செங்களூர் வடக்கிப்பட்டியை சேர்ந்த ரமேஷ், ராஜா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு பானையில் காய்ச்சிய நிலையில் இருந்த 200 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாகப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய ரமேஷ், ராஜா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story