நடைபாதை வியாபாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் கடையடைப்பு போராட்டம்
நடைபாதை வியாபாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
நெல்லை,
நெல்லை டவுன் வடக்கு ரதவீதி உள்ளிட்ட ரதவீதிகளில் நடைபாதையில் பல்வேறு வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் கடை அமைத்து துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், வளையல் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நடைபாதை கடைகளுக்கு ரதவீதிகளில் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வடக்கு ரதவீதியில், நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடை வைத்திருந்தார். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி மாரியப்பனின் கடை சமீபத்தில் அகற்றப்பட்டது. மேலும் அவர் ஒரு ஜவுளிக்கடை மேலாளரை தாக்கி, மிரட்டியதாகவும் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மாரியப்பனுக்கு கடை நடத்த அனுமதி அளித்ததாக தெரிகிறது.
இதையொட்டி மாரியப்பன் நேற்று ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடையை அமைத்து வியாபாரம் செய்யப்போவதாக கூறி டவுன் வடக்கு ரதவீதிக்கு வந்தார். இதையறிந்த ஜவுளிக்கடை கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திடீரென்று தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜவுளிக்கடை ஊழியர்கள் ரோட்டில் திரண்டு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதை அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். மேலும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் அங்கு வந்தார். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கடைகள் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நெல்லை டவுன் பரபரப்பாக காணப்பட்டது.
இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், “ரதவீதியில் பெரும் முதலீடு செய்து கடைகளை நடத்தி வருகிறோம். ஆனால் எந்தவித செலவும் இன்றி ரதவீதிகளில் உள்ள ரோட்டில் நடைபாதையில் பலர் தள்ளுவண்டி கடைகளை வைத்து ஜவுளி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக எங்களது கடைகள் முன்பு வியாபாரம் செய்து, எங்களது கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரமுடியாமல் இடையூறு செய்கின்றனர். எனவே நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக நடைபாதை வியாபாரிகள் கூறுகையில், “நாங்கள் குடும்ப வறுமையின் காரணமாக பல ஆண்டுகளாக ரதவீதிகளில் கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாற்று இடம் ஒதுக்காமல், எங்களது கடைகளை காலி செய்து விடுகின்றனர். இதனால் எங்களது குடும்பம் வருமானம் இன்றி பாதிக்கப்படுகிறது. எனவே பிரச்சினையின்றி கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தும் போது ரதவீதிகளில் நடைபாதை கடைகள் அனைத்தும் அகற்றப்படும். அதற்கு பதிலாக அனைத்து வியாபாரிகளுக்கும் வேறு இடத்தில் கடைகள் நடத்த இடம் ஒதுக்கப்படும். அது தொடர்பான ஆய்வு, பரிசீலனை நடந்து வருகிறது” என்றனர்.
Related Tags :
Next Story