ரஷியா அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து: குமரி வாலிபர் கதி என்ன? உறவினர்கள் சோகம்


ரஷியா அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து: குமரி வாலிபர் கதி என்ன? உறவினர்கள் சோகம்
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

ரஷியா அருகே நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய குமரி மாவட்ட வாலிபரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதனால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

நாகர்கோவில்,

ரஷியா அருகே நடுக்கடலில் அருகருகே நிறுத்தப்பட்டு இருந்த தி கேண்டி என்ற கப்பலும், தி மேஸ்ட்ரோ என்ற டேங்கர் கப்பலும் திடீரென தீ விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் இந்திய மாலுமிகள் உள்பட பலர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கிய தி மேஸ்ட்ரோ என்ற கப்பலில் பணியாற்றிய குமரி மாவட்டம் ஈத்தாமொழி புத்தன்துறை புனித ஜார்ஜ் தெருவை சேர்ந்த ஜெபஸ்டின் பிரிட்டோ பிரீஸ்லின் (வயது 24) என்பவரின் கதி என்ன? என்று தெரியாமல் உள்ளது. இதன் காரணமாக ஜெபஸ்டின் பிரிட்டோ பிரீஸ்லினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இவருடைய தந்தை சகாயராஜ் உறவினர்களுடன் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில், “என் மகன் என்ஜினீயரிங் மற்றும் எம்.எம்.ஏ. டிப்ளமோ முடித்துள்ளார். வழக்கமாக என் மகன் பணியாற்றும் கப்பல் துருக்கி வரும்போது அவன், எங்களுடன் தொலைபேசியில் பேசுவான். இந்த நிலையில் என் மகன் பணியாற்றிய கப்பல் தீ விபத்துக்குள்ளானதாக கடந்த 22-ந் தேதி மதியம் எங்களுக்கு செல்போன் மூலம் தகவல் கிடைத்தது. என் மகனின் பெயர் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலில் இருப்பதாக கூறினார்கள். இதுவரை அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு அவன் ஒரே மகன் ஆவான். எனவே என் மகனை கண்டுபிடிக்க இந்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்க வந்தவர்களுடன் ஆஸ்டின் எம்.எல்.ஏ.வும் உடன் வந்திருந்தார்.

Next Story