அடிப்படை வசதிகள் கேட்டு வாளாந்தூர் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் குளித்தலையில் நடந்தது
அடிப்படை வசதிகள் கேட்டு குளித்தலையில் வாளாந்தூர் கிராமமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், ராஜேந்திரம் ஊராட்சிக் குட்பட்ட வாளாந்தூர் கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி, நூலகம், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத் திடல், சமுதாயக்கூடம், நாடகமேடை, பொதுக்கழிப்பிடம், ரெயில்வே குகைவழிப்பாதை ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் இப்பகுதி மக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் வாளாந்தூர் கிராமமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நேற்றுமுன்தினம் குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் வராததால் அறிவித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென போராட்டக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இதன்படி நேற்று குளித்தலை காந்திசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் வாளாந்தூர் கிராமமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வாளாந்தூர் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள், வாளாந்தூர் கிராமமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story