கைதானவர்களை விடுவிக்க கோரி நள்ளிரவிலும் போராட்டக்களமான தமுக்கம் மைதானம்


கைதானவர்களை விடுவிக்க கோரி நள்ளிரவிலும் போராட்டக்களமான தமுக்கம் மைதானம்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

கைதான நிர்வாகிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டதால் நள்ளிரவிலும் மதுரை தமுக்கம் மைதானம் போராட்டக்களமாக மாறியது.

மதுரை, 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 3 தினங்களாக அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நடந்தது. இதற்காக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 2500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

அவ்வாறு அழைத்து சென்றவர்கள் அனைவரையும் தமுக்கம் மைதானத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே மாலை 5.30 மணியளவில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தவிர மற்ற அனைவரையும் விடுதலை செய்வதாக போலீசார் கூறினர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போராட்டக்குழுவினர் கைது செய்தால் அனைவரையும் கைது செய்ய வேண்டும், நிர்வாகிகளை மட்டும் கைது செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரை கண்டித்து தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அங்கு அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இரவு 9 மணியளவில் அங்கு போடப்பட்டிருந்த மின்விளக்குகளை போலீசார் அணைத்தனர். இதனால் இருட்டில் போராட்டக்காரர்கள் தவித்தனர். மேலும் அவர்கள் தங்கள் வைத்திருந்த செல்போனின் விளக்கை எரியவிட்டபடி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணிவரை தொடர்ந்தது.

பின்னர் நிர்வாகிகள் உள்பட அனைவரையும் போலீசார் விடுதலை செய்வதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து வெளியே வந்தனர். அப்போது, விசாரணை நடத்த வேண்டியதிருப்பதாக கூறி 10 பேரை மட்டும் போலீசார் வேனில் அழைத்து சென்றனர். மற்றவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

முன்னதாக, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க இருப்பதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அதற்கு ஏற்ப போலீசாரும் மைதானத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு வாகனங்களும் மைதானத்திற்கு வந்தன. இதனால் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போராட்டக்களமாக தமுக்கம் மைதானம் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story