கொழும்புவில் இருந்து கோவைக்கு விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்தல் பயணி, ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது
கொழும்புவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு 1½ கிலோ தங்கம் கடத்தி வந்த பயணி மற்றும் தனியார் விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை,
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்றுமுன்தினம் மதியம் கோவைக்கு வரும் விமானத்தில் குறிப்பிட்ட பயணி தங்கம் கடத்தி வருவதாகவும், அவருக்கு கோவை விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் உதவி செய்வதாகவும் கோவையில் உள்ள மத்திய புலனாய்வு இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான மத்திய புலனாய்வு இயக்குனரக மூத்த புலனாய்வு அதிகாரி சண்முக சுந்தரம் தலைமையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் கோவை விமான நிலையத்துக்கு சென்றனர்.
அவர்கள் கொழும்பு விமானம் தரையிறங்கும் வரை விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்தனர். விமானம் தரை இறங்கியதும் அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்தனர். அப்போது கொழும்பு விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வரத் தொடங்கினார்கள். அந்த பயணிகளில் ஒருவர் அங்கு வந்த தனியார் விமான நிறுவன ஊழியர்கள் 2 பேரிடம் ஒரு பார்சலை கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்ட விமான நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து வெளியே வர முயன்றனர். உடனே பார்சலை கொடுத்த பயணியும் அடுத்து குடியேற்ற பிரிவு சோதனைக்கு செல்ல முயன்றார். இதை கவனித்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களை கோவை விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்கி செல்வதற்காக காரில் காத்திருந்த 2 பேரையும் அவர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில் கொழும்புவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பயணி திருச்சியை சேர்ந்த சையது அபுதாகிர்(வயது 35).
அவருக்கு உதவியது கோவையை சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியர்கள் மனோஜ்(25), சதீஷ்(27). எனபதும், கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக விமான நிலையத்துக்கு வெளியே காரில் காத்திருந்த திருச்சியை சேர்ந்த ராஜா(37) என்பதும் தெரியவந்தது. கார் டிரைவர் பெயர் தெரியவில்லை.
தங்கம் கடத்தல் தொடர்பாக பயணி, விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் உள்பட 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோ எடையுள்ள ரூ.55 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-
கொழும்புவில் இருந்து வரும் குறிப்பிட்ட பயணி தங்க கட்டிகளை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு உதவி செய்த தனியார் விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் மற்றும் விமான நிலையத்துக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்தில் கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்வதற்காக காத்திருந்த டிரைவர் உள்பட 2 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு குறைவாக இருப்பதால் 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட் டனர். ரூ.1 கோடிக்கு அதிகமாக இருந்தால் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள். கடத்தல் தங்கம் 24 கேரட் தங்கமாகும். ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.3,335 ஆகும். அவர்களிடம் இருந்து 1.6 கிலோ எடையுள்ள ரூ.55 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன.
கொழும்புவில் இருந்து வந்த பயணி சையது அபுதாகிர் கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறையின் சோதனைக்கு முன்னரே விமான நிறுவன ஊழியர்களிடம் கொடுத்து விட்டால் அவரை சோதனை செய்தாலும் தங்கம் கிடைக் காது. அவர் சுங்கத்துறை மற்றும் குடியேற்ற பிரிவு சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த பின்னர் அவரிடம் விமான நிறுவன ஊழியர்கள் தங்கத்தை கொடுக்க திட்டமிட்டு இருந்தனர்.
மேலும் பயணியிடம் இருந்து வாங்கிய 16 தங்க கட்டிகளை தனியார் விமான நிறுவன ஊழியர்கள் 2 பேரும் வாங்கி தங்கள் பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்துக் கொண்டனர். விமான நிறுவன ஊழியர்கள் என்பதால் அவர்கள் வெளியே வரும் போது சோதனை செய்வது கிடையாது. இப்படி விமான நிறுவன ஊழியர்களின் உதவியுடன் தங்கம் கடத்தல் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
அவர்கள் 2 பேரும் ஏற்கனவே தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் பற்றி தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மிஸ்ரா என்பவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story