கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு அளவீடு பணி
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி அளவீடு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகிறார்கள். இங்கு சன்னதி தெரு, கடற்கரை சாலை ஆகிய இடங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி அளவீடு செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை ஐகோர்ட்டு ஆணையர் கெவின்மேத்யூ தலைமையில் ஆக்கிரமிப்பு அளவீடு பணி நடந்தது. அப்போது, அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடங்களில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்கள் வரைபடத்தில் உள்ள படி கட்டப்பட்டுள்ளதா?, எவ்வளவு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அளவீடு செய்தனர். இந்த பணியில் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமசந்திரன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டனர்.