வடலூரில் இருந்து தஞ்சைக்கு போலி மதுபானம் கடத்திய 2 பேர் கைது 2,400 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்


வடலூரில் இருந்து தஞ்சைக்கு போலி மதுபானம் கடத்திய 2 பேர் கைது 2,400 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jan 2019 3:45 AM IST (Updated: 27 Jan 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் இருந்து தஞ்சைக்கு போலி மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து போலி மதுபானங்கள் தஞ்சைக்கு கடத்தப்படுவதாக திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச்செல்வன், ராஜா ஆகியோர் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் அருகே வெட்டிக்காடு புறவழிச்சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இது குறித்து தஞ்சை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரசு, ஏட்டுகள் குருமாணிக்கம், துரையரசன், வேல்முருகன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் மதுபானம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த காரில் 50 அட்டைப் பெட்டிகளில் 2,400 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

மேலும் இது தொடர்பாக காரில் வந்த வடலூரை சேர்ந்த வேல்முருகன், தூத்துக்குடியை சேர்ந்த வீரன் என்ற பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது போலி மதுபானம் என்பது தெரிய வந்தது. இவர்கள் மதுபானங்களை வடலூரில் இருந்து தஞ்சையில் வினியோகிக்க கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story