நாகையில் நடந்த குடியரசு தின விழாவில் 54 பேருக்கு ரூ.76¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


நாகையில் நடந்த குடியரசு தின விழாவில் 54 பேருக்கு ரூ.76¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த குடியரசு தின விழாவில் 54 பேருக்கு ரூ.76¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறை, ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரணியர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அதைத்தொடர்ந்து 6 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள் 96 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.13 ஆயிரத்து 990 மதிப்பிலான உபகரணங்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்து 800 மதிப்பிலான இஸ்திரி பெட்டியும், 11 பேருக்கு தலா ரூ.66 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ.75ஆயிரம் கல்வி உதவி தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் தலா ரூ.17 ஆயிரத்து 414 மதிப்பிலான தெளிப்புநீர்க்கருவி 3 பேருக்கும், ரூ.35 ஆயிரத்து 700 மதிப்பிலான ஆயில் என்ஜின் 2 பேருக்கும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் வங்கி கடன் உதவியாக 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலையும், தாட்கோ மூலம் 2 பேருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்து 348 கடன் உதவிக்கான காசோலையும் என மொத்தம் 54 பேருக்கு ரூ.76 லட்சத்து 27 ஆயிரத்து 285 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் (கஜா புயல் சீரமைப்புப் பணிகள்) பிரதாப் குமார், உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், ஊர்காவல் படை தளபதி ஆனந்தன், தாசில்தார் இளங்கோவன், அரசு அலுவலர்கள், மற்றும் பள்ளிமாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story