நாகர்கோவிலில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன


நாகர்கோவிலில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
x
தினத்தந்தி 26 Jan 2019 11:00 PM GMT (Updated: 26 Jan 2019 8:16 PM GMT)

நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

நாகர்கோவில்,

குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடந்தது.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடந்தது.

விழாவையொட்டி அங்கு அமைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பத்தில் காலை 8.05 மணிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கொடி நிறத்தில் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் உடன் சென்றார்.

அணிவகுப்பில் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை மற்றும் தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர். முதலில் ஆயுதப்படை போலீசார் செல்ல அவர்களை தொடர்ந்து ஊர்காவல் படை மற்றும் தேசிய மாணவர் படையினர் அணிவகுத்து சென்றனர். போலீசாரின் இந்த கம்பீரமான அணிவகுப்பை பார்வையிட்ட அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அணிவகுப்பு முடிந்ததும் காவல்துறையில் 65 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதாவது முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2 பேருக்கு ரூ.75 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதேபோல தொழிலாளர் துறை மூலம் கல்வி நிதி உதவி மற்றும் விபத்து மரண நிதி உதவி 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500-ம், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 467-ம் அளிக்கப்பட்டது.

மேலும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலை துறையின் கீழ் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மை துறையின் கீழ் 7 பேருக்கு ரூ.47 ஆயிரத்து 300 மதிப்பிலும், ஊரக வளர்ச்சி துறை மூலம் 8 பேருக்கு ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 26 பேருக்கு ரூ.19 லட்சத்தி 18 ஆயிரத்தி 303 மதிப் பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 52 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், 2 பேருக்கு பாராட்டு சான்றிதழுடன் கேடயமும், விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட 20 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கமும் கொடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேசப்பற்றையும், தேசிய ஒருமைப்பாட்டையும் எடுத்துரைக்கும் விதத்தில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளில் மொத்தம் 6 பள்ளிகளை சேர்ந்த 605 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பல வண்ண உடைகளையும், தேசிய கொடி நிறத்திலான உடைகளையும் மாணவ-மாணவிகள் அணிந்து வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

மேலும் கலைநிகழ்ச்சியின் போது நம் நாடு வேற்றுமையிலும் ஒற்றுமை கொண்ட நாடு என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவ-மாணவிகள் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் போல வேடம் அணிந்து இருந்தனர். அதிலும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் யோகாவும் செய்து காட்டினார்கள். சிறு சிறு குழந்தைகளாக இருந்த அவர்கள் உடலை வளைத்து நெளித்து செய்த யோகா காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்துவது போன்றும், பின்னர் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெறுவது போன்றும் நடித்து காட்டினார்கள். அதில் ஒரு பள்ளி மாணவிகள் ரோஸ் மற்றும் பச்சை நிற துணிகளை கொண்டு நடனம் ஆடினார்கள். இது ராணுவ வீரர்களின் சேவைகளை நினைவு கூறும் விதமாக இருந்தது.

குமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயின் தன்மைகளை வகைப்படுத்தியும், அதை எப்படி அணைக்க வேண்டும் என்றும் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.

தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்-சிறுமிகளை கவரும் விதமாக சோட்டா பீம், டோரா, வாத்து, பட்டாசு மற்றும் கோமாளி உள்ளிட்ட வேடமணிந்து வந்து தீயணைப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனவர் (நாகர்கோவில்), சரண்யாஅரி (பத்மநாபபுரம்), மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவகர், கார்த்திகேயன், துணை சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், கார்த்தி, முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தன் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தார். அதாவது தன் மனைவி அம்ருதா பிரசாந்த், தாயார் சுனந்தா வடநேரே மற்றும் மகளையும் அழைத்து வந்தார். அவர்கள் விழா மேடையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

விழாவில் சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்திய கருங்கல் பாலூர் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பரிசு வழங்கி கவுரவித்தார். கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் தங்கசுவாமி, முதல்வர் மலர்விழி ஆகியோர் பாராட்டினர்.

Next Story