இலங்கையில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல் 4 பேரிடம் விசாரணை


இலங்கையில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல் 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. இதில் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்த சென்னையைச் சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் 4 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.

அதில் 4 பேரும் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்தும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தங்கத்தை அவர்கள் யாருக்காக இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட 4 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story