கச்சிராயப்பாளையம் அருகே 3 பெண்களை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை


கச்சிராயப்பாளையம் அருகே 3 பெண்களை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே 3 பெண்களை கட்டிப்போட்டு நகை-பணத்தை 10 பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அடுத்த சிவகங்கை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் செம்மலை(வயது 45). இவருடைய மனைவி செல்வி(40). இவர்களுக்கு செவந்தி என்ற மகளும், செல்வபிரசாத், ராம்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

செம்மலை வெளிநாட்டிலும், செல்வபிரசாத் தூத்துக்குடி துறைமுகத்திலும் வேலை பார்த்து வருகிறார்கள். ராம்குமார் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங்கும், செவந்தி கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். செல்வியும், செவந்தியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக செம்மலையின் தாயார் அங்கம்மாளும் உடன் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் செல்வி உள்ளிட்ட 3 பேரும் வழக்கம்போல், சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்க சென்றனர். அப்போது வீட்டுக்கு வெளியில் நாய் குரைக்கும் சத்தம் அதிகளவில் கேட்டது. இதனால் அங்கம்மாள் தனது வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நின்று கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென அங்கம்மாளை நெட்டி தள்ளிவிட்டு அவரை கையால் தாக்கினர். மேலும் அவர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர்.

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த செல்வி மற்றும் செவந்தி வெளியே ஓடிவந்தனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர் வீட்டில் இருந்த கயிற்றால் செல்வி உள்ளிட்ட 3 பேரையும் கட்டிப்போட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த 1¼ பவுன் நகைகளை முகமூடி கும்பல் பறித்துக்கொண்டது.

பின்னர் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து செவந்தியிடம் உன்னை லேசாக தான் கட்டியுள்ளோம். நாங்கள் சென்றவுடன் நீ கயிற்றை அவிழ்த்து, மீதமுள்ள 2 பேரையும் விடுவித்துவிடு என்று கூறிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

அதன்பிறகு செவந்தி கயிற்றை அவிழ்த்துக் கொண்டு செல்வியையும், அங்கம்மாளையும் விடுவித்தார்.

இதுபற்றி கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வி, அங்கம்மாள், செவந்தி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

மேலும் மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது மோப்பம்பிடித்தபடி தாவணிப்பட்டு கிராமம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தொடர்ந்து தடயவியல் நிபுணர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த மாதம் 17-ந்தேதி நல்லாத்தூர் கிராமத்தில் 6 பேரை மர்மநபர்கள் கட்டிப்போட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அந்த கும்பல் தான் நேற்று முன்தினமும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

பெண்களை கட்டிப்போட்டு முகமூடி கும்பல் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story