தடை உத்தரவு அமலில் இருந்தும் கும்பகோணத்தில், புழக்கத்தில் இருந்து அகலாத பாலித்தீன் பைகள்


தடை உத்தரவு அமலில் இருந்தும் கும்பகோணத்தில், புழக்கத்தில் இருந்து அகலாத பாலித்தீன் பைகள்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

தடை உத்தரவு அமலில் இருந்தும் கும்பகோணத்தில் பாலித்தீன் பைகள் புழக்கத்தில் இருந்து அகலவில்லை. பூ, காய்கனி மார்க்கெட்டுகளில் சகஜமாக கிடைக்கிறது.

கும்பகோணம்,

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை கடந்த 1-ந் தேதி முதல் அமலில் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், கடைகளில் பொருட்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

தடை உத்தரவு அமலில் இருந்தும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் இன்றளவும் சகஜமாக கிடைக்கின்றன.

கும்பகோணம் பகுதியில் உள்ள பூ, காய்கனி மார்க்கெட்டுகளில் பாலித்தீன் பைகள் புழக்கத்தில் உள்ளன. பேக்கரி கடைகளிலும் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறையவில்லை.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

கும்பகோணம் தாராசுரம் அண்ணா காய்கனி மார்க்கெட்டில் பச்சை பட்டாணி உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பேக்கரிகள் மற்றும் பூ மார்க்கெட்டிலும் இதே நிலைமை தான். அரசு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டாலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.

பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பிளாஸ்டிக்கால் இயற்கைக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் பயன்பாடு குறையாமல் பிளாஸ்டிக் பொருட்கள் சகஜமாக கிடைக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story