புதுக்கோட்டையில் போராட்டத்தில் கைதான 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


புதுக்கோட்டையில் போராட்டத்தில் கைதான 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ரெங்கசாமி, செல்லத்துரை, தாமரைச்செல்வன், சாலை செந்தில்குமார், ராஜா, முத்துச்சாமி, சோமசுந்தரம் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 ஆசிரியர்கள் உள்பட 15 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 4 ஆயிரத்து 216, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள் 2 ஆயிரத்து 814 என மொத்தம் 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story