மதுரை பா.ஜனதா பொதுக்கூட்டம் “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” - தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
மதுரையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று கூறினார்.
மதுரை,
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜனதா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் காவி மயமாகி கொண்டிக்கிறது என்பதை இந்த பொதுக்கூட்டத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் காவி இருக்கிறது. தமிழகத்திலும் காவி கால் ஊன்றிவிட்டது. மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை மீண்டும் பிரதமராக்க தொண்டர்கள் எந்த தியாகமும் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்.
இங்கு நடக்கும் பொதுக்கூட்டத்திற்காக உச்சி சூரியனே மறைந்து வருவது போல், உதயசூரியனும் மறையும். சூரியனால் தாமரையை ஒன்றும் செய்ய முடியாது. பிரதமர் மோடியை மதத்தை வைத்து விமர்சிக்கின்றனர். மனித குலத்திற்காக பாடுபடும் மோடியை விமர்சிக்கும் கூட்டம் தவிடுபொடியாகும்.
இந்த கூட்டத்தில் 10 பாராளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு இருக்கிறனர். பா.ஜனதாவிற்கு கூட்டம் சேராது என்று கூறியவர்களுக்கு, இந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் பதில் அளிப்பார்கள்.
தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களையும் கொடுக்கவில்லை என கேலி செய்கிறார்கள். மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை எங்களாலும் பட்டியலிட்டு காட்டமுடியும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். மீண்டும் பிரதமராக மோடி வருவார். மீண்டும் மோடி, வேண்டும் மோடி.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
Related Tags :
Next Story