பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை


பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Jan 2019 4:19 AM IST (Updated: 28 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 36). இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரன் கூலிவேலை செய்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி தமிழரசி(35). இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தமிழரசியும் கூலிவேலை செய்து வந்தார்.

அதே கிராமத்தில் கூலி வேலைக்கு சென்ற இடத்தில் ராஜேந்திரனுக்கும், தமிழரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது பற்றி அறிந்ததும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள் கண்டித்தனர்.

இவர்களது எதிர்ப்பையும் மீறி ராஜேந்திரன், தமிழரசி ஆகிய 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் கோவை மாவட்டம் தென்னூர் என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து 2 பேரும் அங்கு குடியேறினர். இவர்கள் இருவரும் அங்கே ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே தமிழரசியின் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். தமிழரசின், ராஜேந்திரனுடன் தென்னூரில் வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 24-ந் தேதி தமிழரசியின் உறவினர்கள் தென்னூருக்கு சென்று, தமிழரசியை கண்டித்து கள்ளக்காதலனிடம் இருந்து அவரை பிரித்து மேல்மேட்டுக்குப்பத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனால் மனமுடைந்த நிலையில் தமிழரசி காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த விஷபாட்டிலை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள முந்திரி தோட்டத்துக்கு சென்றார். அங்கு விஷம் குடித்து அவர், தற்கொலை செய்து கொண்டார். தமிழரசி பிணமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்ததும், ராஜேந்திரன் தென்னூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவரும் முந்திரி தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story