திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,358 பேர் கைது


திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,358 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,358 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்களுக்கான இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலர்கள் வேலைக்கு வராததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் பணிக்கு திரும்ப மாட்டோம் என்று ஐகோர்ட்டு உத்தரவை மீறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை தரப்பில் 28-ந் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இதையும் மீறி ஏராளமான ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலையின் அருகில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 678 பெண்கள் உள்பட 1,358 பேரை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story