கிராம மக்களை அச்சுறுத்தும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு


கிராம மக்களை அச்சுறுத்தும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஆலாந்துறை அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

பேரூர்,

கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ளது பூலுவப்பட்டி. இந்த கிராமம் மலையடிவார பகுதியில் உள்ளதால் அடிக்கடி இங்கு காட்டு யானைகள் வந்து அட்டகாசம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் வனப்பகுதியை விட்டு குட்டியுடன் வெளியே வந்த சிறுத்தைப்புலி, அங்குள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது.

அங்குள்ள பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 2 குட்டி ஆடு உள்பட 3 ஆடுகளை கடித்து கொன்றது. அத்துடன் 4 கோழிகளையும் சாப்பிட்டது. மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தைப்புலி அதே இடத்துக்கு சென்று 2 கன்றுக்குட்டிகளையும் தாக்கியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக பூலுவப்பட்டி வாரச்சந்தைக்கு பின்புறம் உள்ள போலீஸ்காரர் தோட்டம் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அந்த கூண்டில் சிறுத்தைப்புலி சிக்கி உள்ளதா என்பது குறித்தும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆய்வு செய்தபோது சிறுத்தைப்புலியின் கால்தடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக சிறுத்தைப்புலி பகல் நேரத்தில் ஊருக்குள் வராது. இரவு நேரத்தில் தான் வரும். எனவே அதனை கூண்டுக்கு இழுக்கும் வகையில் இரவில் மட்டும்தான் இரை வைக்கப்படும்.

தற்போது இந்த கூண்டில் தினமும் மாலை 6 மணிக்கு ஆட்டுக்குட்டி வைக்கப்பட்டு வருகிறது. பின்னர் அது காலை 8 மணிக்கு திறந்து விடப்படுகிறது. பொதுவாக சிறுத்தைப்புலியை பிடிக்க வைக்கப்படும் கூண்டில் 2 அறைகள் இருக்கும். ஒரு அறை சிறியதாகவும், மற்றொரு அறை பெரியதாகவும் இருக்கும். சிறிய அறையில் இரை வைக்கப்படும். அங்கு கூண்டு வைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் இருக்க அதன் மீது மரக்கிளைகள் பரப்பி விடப்படும். கூண்டுக்குள் இரை இருப்பதை பார்க்கும் சிறுத்தைப்புலி அதனை பிடிக்க கூண்டுக்குள் பாயும். அப்போது கூண்டு அசையும்போது 2 அறைகளின் கதவும் ஒரே நேரத்தில் மூடிவிடும். அந்த கூண்டுக்குள் சிக்கும் சிறுத்தைப்புலியால் இரையையும் பிடிக்க முடியாது. வெளியேயும் வர முடியாது. எனவே தற்போது வைக்கப்பட்டு உள்ள கூண்டில் விரைவில் சிறுத்தைப்புலி சிக்கி விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story