டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு 2–வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
பவானி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள போத்தநாயக்கன்புதூரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மேலாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போத்தநாயக்கன்புதூரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், போராட்டக்காரர்களும் ஓடிச்சென்று பாட்டிலை பிடுங்கியதுடன், தீக்குளிக்க முயன்ற அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடையை மூடும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என கூறிவிட்டு அங்கு தரையில் உட்கார்ந்தனர். ஆனால் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என மது பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 2–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இதற்கு கொ.ம.தே.க. செயலாளர் துரைராஜா மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இதுபற்றி அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘இன்று (நேற்று) மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் போத்தநாயக்கன்புதூரில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று மனு கொடுத்து உள்ளோம். நாங்கள் டாஸ்மாக் கடையை கிராமப்பகுதியில் அமைக்கத்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதனால், வேறு இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால்தான் இந்த போராட்டம் முடிவுக்கு வரும்’ என்றனர்.
இந்தநிலையில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.