நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் அன்பழகன் எம்.எல்.ஏ.பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாளை யொட்டி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரியாங்குப்பத்தில் நடந்தது.விழாவிற்கு மாநில கழக செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மணவெளி தொகுதி செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் புருஷோத்தமன் பேசியதாவது:–
“புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு தேவையான எவ்வித நலத்திட்டங்களை செய்யவில்லை.கவர்னர் கிரண்பெடி மீது குறை கூறிவருகின்றனர். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை என கூறி புதுடெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தினார்கள். ஆனால் முந்தைய ஆட்சிகாலத்தில் மத்தியில் அமைச்சராக இருந்த நாராயணசாமி நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தந்திருக்கலாம். இதுல்லாம் எல்லாம் ஏமாற்று வேலை தான். மேலும் தற்போது சாதி அரசியல் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஒழிய வேண்டுமானால் புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்“
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.,பேசியதாவது:–
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ1000 மற்றும் பொங்கல் பொருட்களை வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை படைத்துள்ளது. ஆனால் குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் அரசானது ஒரு குடும்பத்தினருக்கு ரூ 135 மட்டும் வங்கி கணக்கில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இது மிகவும் வெட்ககேடாகும். எதுக்கு இந்த ஆட்சி என பொதுமக்கள் கூறிவருகின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் கட்டாயமாக அ.தி.மு.க. தான் அமோக வெற்றி பெரும்“
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.
தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான பவித்ரன் பேசியதாவது:–
“தமிழ்நாட்டில் தற்போது சினிமா நடிகர்கள் அரசியலில் வரும் நிலை உள்ளது. இவர்கள் சினிமாவில் நடிக்கின்ற பாணியில் அரசியலில் ஈடுபட நினைக்கின்றார்கள். மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் சினிமாவில் நடித்து தான் அரசியலில் ஈடுபட்டு முதல் அமைச்சராக இருந்துள்ளார். அவரை போல இவர்களும் நினைத்துக் கொண்டு தான் அரசியலில் வருகின்றனர். ஒரு போதும் இவர்களது கனவு பலிக்காது.
இவ்வாறு பவித்ரன் பேசினார்.