மறியலில் ஈடுபட்ட 1,466 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது 153 பள்ளிகள் செயல்படவில்லை
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்டதாக 1,466 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கேரிக்கைகளை வலியுறுத்தி அரசு எச்சரிக்கையையும் மீறி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16,362 அரசு ஊழியர்களில் 1,580 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மொத்தம் உள்ள ஆசிரியர்கள் 10,779 பேரில் 4,180 பேர் பள்ளிகளுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 153 பள்ளிகள் செயல்படவில்லை.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு நிர்வாகிகள் 35 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பின்னரும் நேற்று ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கருமாதிமடம் அருகில் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராமர் தலைமையில் 218 பெண்கள் உள்பட 375 பேர் மறியலுக்கு வந்தனர். இவர்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது தள்ளு–முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை வலுகட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர்.
அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி ராமமூர்த்தி தலைமையில் மறியலுக்கு வந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் மல்லிகா தலைமையில் மறியலுக்கு வந்த 647 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையில் மறியலில் ஈடுபட்ட 254 பெண்கள் உள்பட 358 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீஸ் அமைச்சு பணியாளர்கள் சங்க தலைவர் கிறிஸ்டோபர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலில் 1029 பெண்கள் உள்பட 1,466 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் முழுமையாக செயல்படுவதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவிட்டது.தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த சனிக்கிழமை மாலை வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. விருதுநகர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் பள்ளிகளில் வேலைக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசிடம் இருந்து இதற்கான உத்தரவை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.