மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட பின்னரும் கூமாபட்டியில் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்


மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட பின்னரும் கூமாபட்டியில் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

கூமாபட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கூமாபட்டி கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

கூமாபட்டியில் டாஸ்மாக் கடை எண் 11869–ஐ அகற்றுமாறு 40 நாட்களுக்கு முன்னர் மாவட்டநிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் உத்தரவிட்டு 40 நாட்கள் கடந்த பின்னரும் அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று வரை கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையின் அருகில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கடைக்கும் கோவில் வாசலுக்கும் 17 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டப்படி இந்த டாஸ்மாக் கடையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி திடீர் காலனியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளி அருகில் பட்டாசு விற்பனைக்காக கட்டப்பட்ட கடையில் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இதனால் பெண்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் அந்த இடத்தில் மது கடை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள எருமைகுளம் கிராம விவசாயிகள் ஏ.முக்குளம் கூட்டுறவு விவசாய சங்கத்தின் மூலம் பயிர் காப்பீடு செய்த 35 விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாத நிலை உள்ளதால் இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தலித்விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் கருப்பையா, கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் இனாம்ரெட்டியபட்டி அருகில் உள்ள வீரகுடும்பன்பட்டியில் மயான வசதி இல்லாததால் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், தனி நபர் இருவர் இதற்கு நிலம் தர தயாராக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அரசு விதிமுறைகளின்படி இந்த நிலத்தை பெற்று ஆதிதிராவிடர் மக்களுக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரி உள்ளார்.

சாத்தூர் யூனியனில் உள்ள சிந்துவப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சிந்துவப்பட்டி, அய்யம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால் கடந்த 2 வருடங்களாக ஒரு குடம் தண்ணீர் ரூ.10–க்கு வாங்க வேண்டிய நிலையில் இருப்பதால் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், அந்த சிரமத்தை உணர்ந்து தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.


Next Story