பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் துரைச்சந்திரன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் இளமாறன், மாரியம்மாள் ஆகியோர் பேசினர்.

போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலி ரூ.400 வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கு பாகுபாடு இல்லாமல் நிவாரணம் வழங்கி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் தாசில்தாரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும், நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள், அதிகாரிகளிடம் வந்தவுடன் நடவடிக்கை எடுக்க சொல்கிறோம் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் கீரனூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் மருதப்பா, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சாந்தா ஆகியோர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் லட்சுமணன், செல்லத்துரை, சரோஜா ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிவேலு தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் ஆய்வாளர் சாந்தி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சாத்தையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்து கலைந்து சென்றனர். 

Next Story