தாராபுரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 23 பேர் கைது


தாராபுரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 23 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 8:22 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தங்களுடைய 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தாராபுரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில், பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. சங்கத்தின் தாலுகா செயலாளர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். வட்டகிளை தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ், மேகவர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய வேலை வாய்ப்பை தடுத்து, தற்போதுள்ள பணியிடங்களை காலி செய்யும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். 5 வருடம் வேலை செய்யும் எம்.எல்.ஏ. களுக்கு, ஆயுள் முழுவதும் பென்சன் வழங்குவது ஏன்? தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், துப்புரவு பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., நீதிபதிகள் போன்ற உயர் அதிகாரிகள் பெற்றுக் கொண்ட 21 மாத கால ஊதிய நிலுவையை, அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகை எங்கே? பழைய பென்சன் திட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும். 3,500 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியில் அமர்த்த கூடாது ஆகிய கோரிக்கைகள, கோ‌ஷங்களாக எழுப்பப்பட்டது.இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story