கட்சி நிகழ்ச்சியில் குறைகூறிய பெண் நிர்வாகியிடம் கோபம் சர்ச்சையில் சிக்கினார், சித்தராமையா துப்பட்டாவை பிடித்து இழுப்பதுபோல் வீடியோ வெளியாகி பரபரப்பு


கட்சி நிகழ்ச்சியில் குறைகூறிய பெண் நிர்வாகியிடம் கோபம் சர்ச்சையில் சிக்கினார், சித்தராமையா துப்பட்டாவை பிடித்து இழுப்பதுபோல் வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

கட்சி நிகழ்ச்சியில் குறைகூறிய பெண் நிர்வாகியிடம் இருந்து கோபத்தில் சித்தராமையா மைக்கை பறித்தார். அப்போது அந்த பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்தது. இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

மைசூரு மாவட்டம் வருணா-டி.நரசிப்புரா அருகே உள்ள கர்கேஸ்வரி கிராமத்தில் நேற்றுமுன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட தாலுகா பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவி ஜமலார், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள் குறித்து மைக் மூலம் பேச தொடங்கினார். அப்போது அவர், வருணா ெதாகுதி எம்.எல்.ஏ. டாக்டர் யதீந்திரா, தொகுதிக்கு சரியாக வருவது இல்லை, நாங்கள் யாரிடம் குறை சொல்வது என்று கூறினார். மேலும் அவர் சித்தராமையா முன்பு இருந்த மேஜையை தட்டியபடி பேசினார். இதனால் சித்தராமையா கடும் கோபம் அடைந்தார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற மரியாதை கூட இல்லையா? என்று கூறிய அவர், கையை அசைத்து நாற்காலியில் அமரும்படி அந்த பெண்ணிடம் கூறினார். ஆயினும் அவர் அமரவில்லை. அதோடு 2-வது முறையாகவும் மேஜையை தட்டியபடி பேசினார். இதனால் சித்தராமையாவின் கோபம் மேலும் அதிகரித்தது. ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடம் இருந்த மைக்கை சித்தராமையா திடீரென பறித்தார்.

அப்போது அந்த மைக்குடன், அந்த பெண் அணிந்திருந்த துப்பட்டாவும் கையில் மாட்டி வந்தது. இதை வீடியோ காட்சியில் பார்ப்பதற்கு, அந்த பெண்ணின் துப்பட்டாவை பிடித்து சித்தராமையா இழுப்பது போலவே இருந்தது.

அங்கு இருந்தவர்கள் சித்தராமையாவை அமைதிப்படுத்தினர். ஆனால் அவரது கோபமோ அடங்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகே சித்தராமையா அமைதி நிலைக்கு திரும்பினார். சித்தராமையா இவ்வாறு கடும் கோபத்தை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறை ஆகும்.

சித்தராமையா கடும் கோபத்தை வெளிப்படுத்தி பேசிய வீடியோ காட்சிகள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையாவின் இந்த செயலுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, குறை சொல்ல வந்த பெண்ணிடம் காட்டிய கோபம் சரியல்ல. அவர் தனது பொறுமையை இழந்திருக்கக்கூடாது. பெண்ணின் குறையை பொறுமையாக கேட்டிருக்க வேண்டும். கேள்வி கேட்பதே தவறா?. ஜனதா தளம்(எஸ்) மீது உள்ள கோபத்தை சித்தராமையா வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணை சித்தராமையா அவமானப்படுத்திவிட்டார்” என்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது, “சித்தராமையா ஒரு விழாவில் பங்கேற்றார். அப்போது ஒரு பெண், குறை கூறி பேசும்போது, மேஜையை தட்டியபடி பேசி இருக்கிறார். அப்போது சித்தராமையா கோபப்பட்டுள்ளார். மைக்கை பறித்துள்ளார். அவர் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை” என்றார்.

சித்தராமையாவின் கோபத்துக்கு ஆளான பெண் ஜமலார் இதுபற்றி நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தராமையா மற்றும் அவரது மகன் யதீந்திரா எம்.எல்.ஏ. எங்கள் பகுதிக்கு வந்துள்ளதாக அறிந்தேன். அதன் பேரில் நான் அங்கு சென்றேன். நான் எழுந்து மைக்கை வாங்கி பேசினேன். அப்போது குறைகளை சொன்னேன்.

தாசில்தார் அலுவலகத்திற்கு மக்கள் சென்றாலும் ஒரு வேலையும் ஆவது இல்லை என்று கூறினேன். பேசும்போது, எனது கைகளை மேசை மீது தட்டியபடி பேசினேன். இதனால் சித்தராமையா கோபம் அடைந்தார்.

என்னிடம் இருந்து மைக்கை பறித்தார். அவர் நல்லவர். முதல்-மந்திரியாக இருந்தபோது ஏராளமான திட்டங்களை அமல்படுத்தினார். ஏதோ கோபத்தில் அவர் இவ்வாறு செய்துவிட்டார். அந்த இடத்தில் எனக்கு அவமானம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். அதன் பிறகு வீட்டிற்கு வந்துவிட்டேன்.

சித்தராமையா மகன் யதீந்திரா எம்.எல்.ஏ. எங்கள் தொகுதிக்கு வந்து செல்கிறார். அவர் வருவது பற்றி எனக்கு தகவல் தெரியவில்லை. யதீந்திரா வந்தால், அதுபற்றி என்னிடம் தகவல் தெரிவிக்கும்படி கட்சி தொண்டர்களிடம் கூறி இருந்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.

அவர் தொகுதி பக்கம் வருவது இல்லை என்று நான் கூறவில்ைல. ஒரு தலைவர் முன்பு மேஜை மீது தட்டியபடி பேசியது எனது தவறு தான். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் கோபத்தில் இருந்ததால் அதை கேட்கவில்லை. இவ்வாறு ஜமலார் கூறினார்.

விழாவில் பெண் ஒருவரிடம் சித்தராமையா கடும் கோபத்தை காட்டி ருத்ரதாண்டவமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா விளக்கம் கொடுத்து உள்ளார். அதில் “அந்த பெண்ணை எனக்கு 15 ஆண்டுகளாக தெரியும். அவர் எனது சகோதரி போன்றவர்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய தலைவி சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் “தேசிய பெண்கள் ஆணையம் இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து கையில் எடுத்து நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக போலீசில் புகார் செய்வோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடகத்தில் கவுரவர்களின் அரசு என்ற தலைப்பில் சித்தராமையா மைக்கை பறிக்கும்போது பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதற்கு பதிலடியாக “பா.ஜனதாவிடம் இருந்து கற்கும் நிலையில் நான் இல்லை” என்று சித்தராமையா பதிவிட்டு உள்ளார்.

Next Story