அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பியதால் பாதிப்பு இல்லை


அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பியதால் பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 29 Jan 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெரும்பாலானோர் பணிக்கு திரும்பியதால் பாதிப்பு இல்லை.

தஞ்சாவூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 22–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேலைக்கு திரும்ப மறுப்பு தெரிவித்ததால் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதற்காக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழகஅரசு மும்முரமாக ஈடுபட்டது. இந்த பணியில் சேர தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பட்டதாரிகள் விண்ணப்பங்களுடன் குவிந்தனர்.


அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கி பள்ளிகளில் பணியில் சேர உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடைசி வாய்ப்பாக பள்ளிகளில் சேர்ந்தால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 96 பேர் தஞ்சை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் காலை நிலவரப்படி 3 ஆயிரத்து 157 ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்து 240 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 300–க்கும் மேற்பட்டோர் தஞ்சை ரெயில் நிலையம் பார்சல் அலுவலகம் முன்பு நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வதற்கு வசதியாக 5 மினிபஸ்கள், போலீஸ் வேன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை அறிந்தவுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களும் தங்களது பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்ததால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.

Next Story