அரசு இறுதி எச்சரிக்கை, கடலூர் மாவட்டத்தில் 80 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்
பணிக்கு சேருமாறு அரசு இறுதி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் 80 சதவீத ஆசிரியர்கள் நேற்று பணிக்கு திரும்பினார்கள்.
கடலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அரசு அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு கிடந்தன. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை என்கிற பெயரில் அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இன்று காலை(அதாவது நேற்று) 9 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தகவலை தெரிவித்துவிட்டு தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியை தொடரலாம்.
அவ்வாறு பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அதில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிக்கூடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 30 ஆயிரத்து 665 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் 3,073 பேர் தவிர மற்றவர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். இதனால் கடந்த சில நாட்களாக 60 சதவீதமாக இருந்த வருகை பதிவு நேற்று 90 சதவீதமாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையை பொறுத்தவரை 10,935 ஆசிரியர்களில் 8,374 பேர் நேற்று பணிக்கு வந்தனர். 301 பேர் அனுமதிக்கப்பட்ட விடுமுறையில் சென்றுள்ளனர். 2,260 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் 80 சதவீத ஆசிரியர்கள் நேற்று பணிக்கு திரும்பினர்.
ஆசிரியர்கள் வருகையால் கடந்த சில நாட்களாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்ததை பார்க்க முடிந்தது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, நேற்று 80 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இதுவரை கைதான 73 பேரில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவான அறிக்கை வந்தபின்னரே நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக நேற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி முடித்த ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் பணி கேட்டு விண்ணப்பித்த யாருக்கும் பணி ஆணை வழங்கப்படவில்லை என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story