மாவட்டம் முழுவதும் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் 1750 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை மற்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தலை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் 1750 அரசு ஊழியர்கள் மட்டும் 6–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நேற்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாத நிலையில் அவர்களது பணியிடம் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்திருந்தது. சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என வழக்கு விசாரணையின் போது அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மொத்தமுள்ள 10 ஆயிரத்து 779 ஆசிரியர்களில் 880 பேர் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
பள்ளிக்கல்வித்துறை விதித்த காலக்கெடுவுக்குள் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். மீதமுள்ள ஆசிரியர்களும் பணியில் சேர வந்துகொண்டிருப்பதாக தகவல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். எனவே தற்காலிக ஆசிரியர் நியமனம் தாமதப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் செயல்படுகின்றன. காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 16ஆயிரத்து 362 பேரில் 790 பெண்கள் உள்பட 1750 பேர் மட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 10.7 சதவீதம் ஆவார்கள். விருதுநகர் நீதிமன்றங்களில் 50 சதவீத பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்படவில்லை.
ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் நேற்று மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் மறியல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் திடீரென மறியல் முடிவு கைவிடப்பட்டு மாவட்டம் முழுவதும் 3 இடங்களில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க பொருளாளர் கோட்டைராஜன் தலைமையில் 30 பெண்கள் உள்பட 35 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் மல்லிகா தலைமையில் 50 பெண்கள் உள்பட 75 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமையில் 70 பெண்கள் உள்பட 110 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆகமொத்தம் 3 இடங்களிலும் 150 பெண்கள் உள்பட 320 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.