நாகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தொடர் வேலை நிறுத்தம் காரணமாக போதிய அளவு ஊழியர்கள் இல்லாததால் அரசு அலுவலகங்கள் 6-வது நாளாக வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story