பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:00 AM IST (Updated: 30 Jan 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும்.

பெரம்பலூர்,

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில், 50 சதவீதம் தொகை இரண்டில் எது குறைவோ அந்த தொகையை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும். 125 சி.சி.க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். 2018-19-ம் ஆண்டிற்கு அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் பணிபுரியும் பெண்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற நாளைக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இலவசமாக பெற்று விண்ணப்பிக்கலாம். தகுதியான பயனாளிகளின் விண்ணப்பங்கள் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, இரு சக்கர வாகனத்திற்கான மானியம் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் பெறுவோர் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அதன்படி வயதிற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று) ஓட்டுனர் உரிமம், வருமான சான்றிதழ் (வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பெற வேண்டும்), கல்விக்கான சான்றிதழ் (8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்) கடவு சீட்டு அளவு புகைப்படம், சாதி சான்றிதழ் (ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும், அவரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த தகவலை அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் விஜயலட்சுமி (அரியலூர்), சாந்தா (பெரம்பலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story