புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்பட 483 பேர் கைது


புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்பட 483 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 483 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டு வரும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அவர்களை சாலை மறியலில் ஈடுபட விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது பெண்ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை சுற்றிவளைத்து 425 பெண்கள் உள்பட 483 பேரை கைது செய்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் போலீஸ் வேன்களில் ஏற்றி புதுக்கோட்டையில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கிய நிர்வாகிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று பொது அலுவலக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story