கரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது


கரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jan 2019 10:30 PM GMT (Updated: 29 Jan 2019 8:21 PM GMT)

கரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. முதல் கட்டமாக பூப்பந்து, நீச்சல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

கரூர்,

கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தாந்தோன்றிமலை விளையாட்டரங்கில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி முன்னிலை வகித்தார். முதல்கட்டமாக பூப்பந்து போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன. உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்படுத்தி வெற்றி பெற்ற அணியை தேர்வு செய்தனர்.

இதே போல், கரூர் மாவட்டம் காக்காவாடி, புன்னம்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் பள்ளி விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தாந்தோன்றிமலை விளையாட்டரங்கில் கூடைப்பந்து, கபடி, கைப்பந்து மற்றும் தனியார் பள்ளியில் ஹேண்ட்பால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) தாந்தோன்றிமலை விளையாட்டரங்கில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் நடக்கிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி செய்து வருகிறார். 

Next Story