வானவில் : ஐ.டி. துறையினருக்கேற்ற பிரத்யேக டாடா வாகனங்கள்


வானவில் : ஐ.டி. துறையினருக்கேற்ற பிரத்யேக டாடா வாகனங்கள்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:04 PM IST (Updated: 30 Jan 2019 4:04 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவான வளர்ச்சியை எட்டிவரும் இ-காமர்ஸ் (தகவல் தொழில் நுட்பத்துறை) துறைக்கென பிரத்யேகமாக வாகனங்களை வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளது.

 இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக அதிக அளவிலான மென் பொருள் நிறுவனங்களைக் கொண்டுள்ள பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை கவரும் நோக்கில் குர்காவ்னில் உள்ள தேவிலால் மைதானத்தில் நடைபெற்ற இ-காமர்ஸ் கண்காட்சியில் அத்துறையினருக்குத் தேவைப்படும் வகையிலான வாகனங்களை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தது.

இந்த வாகனங்களில் எவ்வித மாறுதலும் செய்யாமல் அப்படியே பயன்படுத்தும் வகையில் (ரெடி டு யூஸ்) வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். மொத்தம் 13 வகையான மாடல்களில் வெவ்வேறு வடிவமைப்புகளில் இவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஐ.டி. துறையினருக்கு எத்தகைய வாகனங்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்தி அதன் பிறகே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இ-காமர்ஸ் துறை நிறுவனங்களையும், நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் வாகனங்களை உருவாக்கியுள்ளனர்.

ஏஸ் டெலிவரி வேன் எனப்படும் வாகனம் இ-காமர்ஸ் துறையினரின் பொருட்களை டெலிவரி செய்வதற்கென்று வடிவமைக்கப்பட்ட வாகனமாகும்.

இ-காமர்ஸ் துறையினரின் பேக்கேஜ்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் ஏஸ் ஸிப் பேனல் வேன். அதிக அளவிலான இத்துறையினரின் சரக்குகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் சூப்பர் ஏஸ் மின்ட் எக்ஸ்.பி.எஸ். மாடலாகும்.

சூப்பர் ஏஸ் மாடலானது உள்பகுதியில் பாதுகாக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளைக் கொண்டது. உரிய தட்ப வெப்பத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை இதில் கொண்டு செல்ல முடியும். அதேபோல எளிதில் அழுகும் அல்லது கெட்டுப் போகக் கூடிய பால், பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றைக் கையாள இதைப் பயன்படுத்த முடியும்.

இத்துறையினரின் தேவைக்கேற்ப இலகு ரக மற்றும் நடுத்தர ரக வாகனங்களை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்திலும் ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சங்கேத எண் கொண்ட பூட்டு வசதி, சி.சி.டி.வி. கேமரா, சரக்குகளின் அளவைக் காட்டும் உணர் கருவி (சென்சார்), டெலிமேடிக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் இந்த வாகனத்துக்கு இத்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மாடல்களில் 24 அடி கன்டெய்னர், 20 அடி கன்டெய்னர் கொண்ட லாரிகளும் வந்துள்ளன. ஏ.சி. வசதி கொண்ட 32 அடி ரெப்ரிஜிரேட்டர் கன்டெய்னர், குளிர் பதன கிடங்குகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல பெரிதும் உதவும். எரிபொருள் திருட்டை கண்டுபிடிக்கும் வசதி, டிஜிட்டல் லாக், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

பிரமாண்டமான வளர்ச்சியை எட்டி வரும் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கேற்ப உடனடியாக பயன்படுத்தும் வகையிலான வாகனங்களை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியிருப்பது இத்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Next Story