அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: கருப்பு சின்னம் அணிந்து நர்சுகள் பணி புரிந்தனர்


அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: கருப்பு சின்னம் அணிந்து நர்சுகள் பணி புரிந்தனர்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து பணி புரிந்த நர்சுகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தினர் நேற்று கருப்பு சின்னம், கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தலைமை மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் நர்சுகள் கருப்பு சின்னம் மற்றும் கோரிக்கை அட்டைகளை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் நர்சுகள், பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வளர்மதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவை ஊதியத்தொகையை வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக சேர்க்க வேண்டும். மத்தியஅரசுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 600 நர்சுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி கருப்பு சின்னம் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நர்சுகள் தெரிவித்தனர்.

Next Story