கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு நாசம்


கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு நாசம்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே வெள்ளைப்பாறை கிராமத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு நாசமானது. வியாபாரி குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி வெள்ளைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). வியாபாரி. அவருடைய மனைவி பாரதி (27). இவர் களுடன், சுரேசின் தாயார் பழனியம்மாள் (70) வசித்து வருகிறார். இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் எரிவாயு இணைப்பு பெற்றனர்.

நேற்று முன்தினம் இரவு பாரதி சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாரதி அலறியடித்து வீட்டை வீட்டு வெளியே ஓடினார். மேலும் வீட்டில் இருந்த சுரேசும், பழனியம்மாளும் வெளியேறினர்.

அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் மேற்கூரை பறந்தது. மேலும் வீடும் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இருப்பினும் வீட்டின் பெரும்பகுதி எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த நகை, பணம், சான்றிதழ்கள், துணிமணிகள் எரிந்து தீக்கிரையாகின. நல்லவேளையாக 3 பேரும் வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இல்லையெனில் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக் கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story