பவானிசாகர் அருகே ஓட்டல் உரிமையாளரை காரில் கடத்தியதாக 5 பேர் கைது


பவானிசாகர் அருகே ஓட்டல் உரிமையாளரை காரில் கடத்தியதாக 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 31 Jan 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே ஓட்டல் உரிமையாளரை காரில் கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34), இவருடைய மனைவி பூர்ணிமாதேவி (23), இவர்களுக்கு புகழ் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 6 மாதமாக பவானிசாகர் அருகே உள்ள தயிர்பாளையத்தில் ஆனந்தகுமார் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் அரூர் புதுப்பட்டியை சேர்ந்த கிரி (40) என்பவருக்கும், ஆனந்தகுமாருக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்தது. அதன்பின்பு இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 28–ந் தேதி கிரி ஆனந்தகுமாரின் ஓட்டலுக்கு வந்துள்ளார். ‘ஓட்டலை விட்டு வெளியே வா கொஞ்ச நேரம் உன்னிடம் பேசவேண்டும்‘ என்று அவர் ஆனந்தகுமாரை அழைத்துள்ளார். அதை நம்பி ஆனந்தகுமாரும் அவருடன் சென்றார். அப்போது அங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு காரில் 5 பேர் காத்திருந்தார்கள். பின்னர் 6 பேரும் சேர்ந்து ஆனந்தகுமாரை காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றுவிட்டார்கள்.

இதுகுறித்து பூர்ணிமாதேவி பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தகுமாரை கடத்தியவர்களை வலைவீசி தேடி வந்ததார்கள்.

இந்தநிலையில் ஆனந்தகுமாரை கடத்திச்சென்ற கார் சத்தியமங்கலம் பகுதியில் சுற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் என்ற இடத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் போலீசாரை கண்டதும் வேகமாக வந்த திசையில் திரும்பியது. உடனே உஷாரான போலீசார் ஜீப்பில் விரைந்து சென்று காரை மடக்கினார்கள். காருக்குள் கடத்தப்பட்ட ஆனந்தகுமார், கிரி மற்றும் 5 பேர் இருந்தார்கள். உடனே காரில் இருந்து கிரி இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து காருக்குள் இருந்த ஆனந்தகுமாரை போலீசார் மீட்டனர். மேலும் சுற்றிவளைக்கப்பட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் (22), அழகரசன் (27), பெருமாள் (40), சங்கர் (33), சூரியதாசன் ஆகிய 5 பேரையும் கைது செய்தார்கள்.

மேலும் தப்பி ஓடிய கிரியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story