வறட்சியின் பிடியில் ஏரிகள்: சென்னை மக்களின் தாகம் தீர்க்க கல்குவாரி தண்ணீர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிரடி


வறட்சியின் பிடியில் ஏரிகள்: சென்னை மக்களின் தாகம் தீர்க்க கல்குவாரி தண்ணீர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 31 Jan 2019 4:15 AM IST (Updated: 31 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்கு கல்குவாரி தண்ணீரை பெற்று வினியோகிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் வழங்கும் ஏரிகள், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஆகும். நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்கிறபோது, இந்த ஏரிகளில் தண்ணீர் நிரம்புகிறது.

தமிழக, ஆந்திர அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்கீழ், ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தமிழகத்துக்கு, ஆந்திரா வழங்க வேண்டும்.

அந்த வகையில், கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு பருவத்துக்கும் 2 அல்லது 3 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறந்து அது பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து புழல், மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலமாக சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியம் சராசரியாக ஒரு நாளைக்கு 65 கோடி லிட்டர் குடிநீரை சென்னை மாநகர மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

சமீப ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனது. இதன் காரணமாக இந்த ஏரிகள் வரலாறு காணாத வகையில் வறட்சியை சந்தித்தன. இந்த ஆண்டும் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறட்சியின் பிடியில் உள்ளன.

நேற்று நிலவரப்படி 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 1.030 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இதில் பூண்டி ஏரியில் 20 கோடி கன அடியும், புழல் ஏரியில் 74 கோடியே 10 லட்சம் கன அடியும், சோழவரத்தில் 4 கோடியே 80 லட்சம் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 5 கோடியே 30 லட்சம் கன அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.

4 ஏரிகளிலும் கடந்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி நிலவரப்படி 4.883 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. அவ்வாறு இருந்தும் கடந்த ஆண்டு கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது.

ஆனால் தற்போது 1.042 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. எனவே இது இந்த ஆண்டு கோடை காலத்தில் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதற்கு ஆதாரமாக அமைகிறது.

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஏரிகளில் தற்போது இருக்கும் 1 டி.எம்.சி. தண்ணீர் மூலம் ஒரு மாத தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

வீராணம் ஏரியிலும் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது. எனவே வீராணம் ஏரியில் இருந்து 18 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதுதவிர கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களான மீஞ்சூரில் இருந்து 7 கோடியே 40 லட்சம் லிட்டரும், நெம்மேலியில் இருந்து 9 கோடியே 80 லட்சம் லிட்டரும், ஏரிகளில் இருந்து 16 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீரும் பெறப்படுகிறது.

மேலும், 15 பெரிய கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் குடிநீருக்கு ஏரிகள் கைகொடுக்கவில்லை என்றால், சென்னையை அடுத்துள்ள சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் திருவள்ளூரில் உள்ள விவசாய பம்பு செட்டுகளில் இருந்து குடிநீர் எடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். தற்போது கல்குவாரிகளில் 1.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அந்த தண்ணீரையும் சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்க்க எடுத்து சமாளிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

2017-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டைகளில் தேங்கி நின்றிருந்த நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க முடிந்தது. அதற்காக கல்குவாரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டது.

எச்.டி., டி.ஏ. என இரண்டு வகையான குழாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அந்த குழாய்களின் இணைப்புகளில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டும், சேதமடைந்தும் இருப்பதால் அதனை மீண்டும் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. குழாய்கள் சீரமைப்பு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் இங்குள்ள 2 கல்குவாரி குட்டைகளுக்கு வந்து சேரும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் அந்த 2 குட்டைகளில் மட்டும் அதிகளவில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மற்ற குட்டைகளில் மழைநீர் மட்டுமே இருப்பதால் அங்கு சற்று குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

Next Story