நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2019 10:15 PM GMT (Updated: 30 Jan 2019 8:52 PM GMT)

கரூர் மாவட்டத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரி கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிவடைந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம்-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

2018 ஏப்ரல் 1-ந்தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்து இருத்தல் வேண்டும். மத்திய-மாநில அரசிடம் ஓய்வூதியம் பெறுவோர், இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியற்றவராவர். நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 21-ந்தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story