வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேர் கைது

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு மணிமுத்தாறு அணை 4-வது ரீச் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியகுளத்தின் கீழ் உள்ள குளங்களான ஏறந்தை குளம், ராஜகோபாலபுரம் குளம், அழகனேரி குளம் மற்றும் மன்னார்புரம் குளங்களுக்கு இந்த பெரிய குளத்தின் நடுமடை கால்வாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரியகுளத்தில் இருந்து மேற்கண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் தண்ணீர் இல்லாமல் பட்டுப்போகும் நிலையில் உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற பெரியகுளம் நடுமடை கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் விலக்கில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து அனுமதி இல்லாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக ராமசேகர், வானமாமலை, மான்சிங் உள்ளிட்ட 100 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களை மினிபஸ்சில் ஏற்றி வாழைத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
Related Tags :
Next Story