மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போளூர்-வேலூர் சாலையில் ரெயில்வே கேட் மூடப்பட்டது
மேம்பாலம் அமைக்கும் பணிக்கான போளூர் - வேலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது.
போளூர்,
போளூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போளூர் - வேலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் நேற்று முதல் மூடப்பட்டது. உயர்மட்ட ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் 748 மீட்டர் நீளம் இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. நேற்று முன்தினம் ரெயில்வே கேட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை 11 மணிக்கு இந்த கேட் மூடப்பட்டது.
இதனால் வேலூர் - ஆரணி மார்க்கத்தில் இருந்து போளூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் போளூர் பைபாஸ் வழியே சுற்றி செல்ல வேண்டும். இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் சவ ஊர்வலம் வந்தது. அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், ரெயில்வே கேட் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. சவ ஊர்வலம் சென்ற பின் மீண்டும் ரெயில்வே கேட் மூடப்பட்டது. ரெயில்வே கேட் மூடப்பட்ட பின்பும், இருசக்கர வாகன ஓட்டிகள் கேட்டுக்கு அடியில் வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றனர்.
மேம்பால பணி நிறைவடைய சுமார் 5 ஆண்டுகள் ஆகும். இதனால் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story