கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் செண்டுமல்லி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கூடலூர்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை, திராட்சை, காய்கறிகளுக்கு அடுத்தபடியாக பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பூக்களுக்கு நிரந்தர விலை கிடைப்பதில்லை. திருவிழா, முகூர்த்த நாட்களில் மட்டுமே பூக்கள் விலை ஏறுமுகமாக உள்ளது. பிற நாட்களில் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

அதிலும் கோவில் திருவிழாக்களில் செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மட்டுமின்றி, தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில், தேனி மாவட்டத்தில் குறிப்பிடும்படியான கோவில் திருவிழாக்கள் எதுவும் தற்போது இல்லை. இதனால் செண்டுமல்லி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ செண்டுமல்லி பூ ரூ.40-ல் இருந்து ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. செடிகளில் இருந்து பூக்களை பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க கூட வருமானம் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில விவசாயிகள், பூக்களை பறிக்காமல் அப்படியே செடிகளில் விட்டு விடுகின்றனர்.
1 More update

Next Story