தாராபுரத்தில் ரேஷன்கடையை திறக்க கோரி கூட்டுறவு சங்க தலைவர் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்
தாராபுரத்தில் ரேஷன் கடையை திறக்க கோரிக்கை விடுத்து கூட்டுறவு சங்க தலைவர் வீட்டை பெண்கள் முற்றுகையிட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் ஜின்னா மைதானத்தில் 12-ம் எண் ரேஷன்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை கூட்டுறவு சங்கத்தினர் மூடிவிட்டு, சின்னகடைவீதியில் உள்ள கூட்டுறவு சங்க வளாகத்தில் இருந்த ஒரு கடையில் விற்பனை செய்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜின்னா மைதானத்தில் அதே ரேஷன்கடையை மீண்டும் திறக்க கோரி போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் விரைவில் அதே பகுதியில் ரேஷன்கடையை திறப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அன்றைக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜின்னா மைதானத்தை சேர்ந்த பெண்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு சங்கத்தலைவர் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-
ஜின்னா மைதானத்தில் செயல்பட்டு வந்த 12-ம் எண் ரேஷன் கடையை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மூடியதற்கு கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் அதிகாரிகள் ஜின்னா மைதானத்தில் செயல்பட்டுவந்த ரேஷன் கடையின் தரைத்தளம் மிகவும் சேதமடைந்து விட்டதால், எலிகள் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் உணவுப் பொருட்களின் சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் எலிகளால் உணவுப்பொருட்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது எனவே ரேஷன் கடையை இடமாற்றம் செய்து விட்டோம். இதே பகுதியில் வேறு கடை வாடகைக்கு கிடைத்தவுடன், மீண்டும் அங்கு ரேஷன் கடை திறக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
தற்போது ஒரு மாத காலம் ஆகியும், ஜின்னா மைதானம் பகுதியில் ரேஷன் கடை திறக்கவில்லை. இதனால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக முதியவர்களால் வெகு தூரம் சென்று, ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிவர முடியவில்லை. எனவே உடனடியாக ஜின்னா மைதானத்தில் மீண்டும் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தலைவர் டி.டி.காமராஜ் வீட்டை முற்றுகையிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதையடுத்து கூட்டுறவு சங்கத்தலைவர் டி.டி.காமராஜ் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் ஜின்னா மைதானத்தில் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story