மதுக்கடைக்கு எதிர்ப்பு: 6–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பவானி அருகே உள்ள போத்தநாயக்கன்புதூர் கிராமத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி,
பவானி அருகே உள்ள போத்தநாயக்கன்புதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிய மதுக்கடை கடந்த மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து போத்தநாய்க்கன்புதூர் கிராம மக்கள் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 25 பேர் மதுக்கடைக்கு செல்லும் வழியிலேயே சாலையோரத்தில் கொட்டகை அமைத்து அதில் கருப்புகொடிளை கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுக்கடையை மூடும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது, மதுக்கடையை அகற்றும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.