அரசு விழாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் பரபரப்பு


அரசு விழாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 3:30 AM IST (Updated: 2 Feb 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

பிளாஸ்டிக் மாசினை குறைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கப்படும் பிளாஸ் டிக் தாள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்புகள், பிளாஸ் டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுத்திடும் வகையில் நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 192 அலுவலர்களை கொண்ட 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு புதுக்கோட்டையில் மகளிர் திட்ட அலுவலகத்தில் வைத்து டீ மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகளில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு டீ வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அவ்வப்போது அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகளில் டீ வழங்கிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறந்து உள்ளது’ என்றார்.

Next Story