அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் அ.தி.மு.க. கோரிக்கை


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் அ.தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-02T02:15:08+05:30)

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

அ.தி.மு.க. இணை செயலாளரும், புதுவை முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஊழியர்களும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது முற்றிலும் நியாயமானது. ஆனால் அரசு இதைப்பற்றி கண்டுகொள்ளாமலும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமலும் உள்ளது வருத்தத்திற்குரியது.

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அளிக்கும் மானியத்தை குறைக்கவேண்டும் என்றும் அதற்கு ஈடான நிதியை பெற்றோரிடம் வசூலித்துக்கொள்ளட்டும் என்று கவர்னர் கூறியதாக வந்துள்ள செய்தி உண்மையெனில் அது பெரும் கண்டனத்திற்குரியது. உண்மை நிலையையும் சட்ட விதிகளையும் புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடுதான் இது. அப்பள்ளிகளுக்கு எவ்வளவு மானியம் அளிக்கவேண்டும் என்பதை 1996 மற்றும் 2014–ம் ஆண்டுகளின் பள்ளிக்கல்வி விதிகள் தீர்மானிக்கின்றன.

அந்த விதிகள் நீடிக்கும் வரை மானியத்தின் அளவை கவர்னர் ஏதேச்சதிகாரமாக குறைக்க முடியாது. சட்ட திருத்தம் கொண்டுவந்து மானியத்தை குறைத்தபின் அது செல்லும். ஆனால் இதுவரை சட்டமன்றம் இதுவரை அந்த திருத்தத்தை செய்யவில்லை. எனவே கவர்னரின் கூற்று உள்நோக்கம் கொண்ட சட்டவிரோதமான கூற்றாகும்.

மானியத்தை குறைத்து அச்சுமையை மாணவர்கள் மீது சுமத்தினால் இலவச கல்வி என்ற கோட்பாட்டிற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானதாக இருக்காதா? இப்பள்ளிகளில் பெரும்பாலானவை சிறுபான்மையின பள்ளிகளாக இருக்கின்றன. இவைகளின் மானியத்தை குறைத்தால் அது சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான காரியமாக பார்க்கப்படும். இத்தவறை கவர்னர் செய்தாலும், அமைச்சர்கள் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே அரசு உடனடியாக இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து அவர்களது கோரிக்கையை மனிதாபிமானத்தோடு பரிசீலித்து அவற்றை ஒரு காலகட்டத்திற்குள் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இப்பள்ளிகளின் மீது உள்ள சுமைகளை ஒட்டுமொத்தமாக அகற்ற எவ்வளவு நிதி தேவைப்படுகிறதோ அதனை பட்ஜெட்டின் திருத்திய மதிப்பீட்டில் சேர்த்து அளிக்கவேண்டும். இந்த நியாயமான காரியத்தை செய்யவில்லை என்றால் இப்பிரச்சினையை மத்திய அரசின் பார்வைக்கு கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.


Next Story