மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு


மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-02T02:34:39+05:30)

மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு 150 மையங்களில் நேற்று தொடங்கியது.

திண்டுக்கல், 

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை செயல்படவில்லை.

பின்னர் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பவில்லை என்றால் அவர்கள் பணியிடம் காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார், சுயநிதி பள்ளிகளில் நேற்று முதல் மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது.

இதற்காக ஆய்வக வசதி உடைய பள்ளிகளில் 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் வேதியியல், இயற்பியல், கணினி பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது. தாவரவியல் பாடத்துக்கான செய்முறை தேர்வுக்கு மட்டும் 3 மணி நேரமும், மற்ற பாடங்களுக்கு சராசரியாக 2½ மணி நேரமும் ஒதுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் செய் முறை தேர்வை எழுதுகின்றனர். இதேபோல் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை செய்முறை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்காகவும் அந்தந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அந்த பள்ளியின் அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்றனர்.

Next Story